1362. சீர்மு கந்தசெஞ் சேற்றினுள்
ளார்மு கம்புக வாழ்ந்தரோ
நீர்மு கந்நில 2முற்றபொற்
றேர்மு கஞ்சிதை வுற்றதே.
     இ - ள்.) சீர்முகந்த - ஒப்பனை செயப்பட்டனவாய் வந்து, செஞ்சேற்றினுள் -
செவ்விய ஊனாகிய சேற்றிலே, ஆர்முகம் புக - தம் ஆர்க்கால் என்னும் உறுப்புக்கள்
புதையுமாறு, ஆழ்ந்து - அழுந்தி, நீர்முகம் நிலமுற்ற - குருதி நீரையுடைய
நிலத்தின்கண்ணே பொருந்தின, பொற்றேர் - பொன்னாலாகிய தேர்கள், முகம்
சிதைவுற்றதே - தம் முன்புறம் சிதையப்பெற்றன, (எ - று.)

     தேர் சிதைவுற்றது - சாதி ஒருமை.

     சீர் முகந்த - பெயர், சீர்மையை ஏற்றுக்கொண்டனவாகிய தேர் எனக் கூட்டுக. ஆர்
- ஆர்க்கால்கள். செஞ்சேறு - சிவந்த ஊனாகிய சேறு.

(232)