சுவலனசடியின் பெருமை | 138. | இங்கண் ஞால மெல்லைசென் றிலங்கு வெண்கு டைந்நிழல் வெங்கண் யானை வேந்திறைஞ்ச வென்றி யின்வி ளங்கினான் கொங்கு கொண்டு வண்டறைந்து குங்கு மக்கு ழம்பளாய் 1அங்க ராக மங்கணிந்த லர்ந்த வார மார்பினான். | (இ - ள்.) கொங்கு கொண்டு வண்டு அறைந்து - தேனையுண்டு வண்டுகள் ஆரவாரிக்கப்பெற்று; குங்குமக் குழம்பு அளாய் - குங்குமக் குழம்பு மிகப்பூசப் பெற்று; அங்கராகம் அங்கு அணிந்து - மணப்பொருளும் அதன்மேல் அமைந்து; அலர்ந்த - பரந்த; ஆரமார்பினான் - மாலைகளை யணிந்த மார்பையுடையவன்; இங்கண் ஞாலம் எல்லை சென்று - இந்த உலகத்தின் எல்லை எவ்வளவு உண்டோ அவ்வளவு வரையிலும் பரந்து சென்று; இலங்கு வெண் குடை நிழல் - விளங்குகின்ற வெண் கொற்றக் குடையின் நிழலிலே; வெங்கண் யானை வேந்து இறைஞ்ச - அச்சத்தைத்தருங் கண்களையுடைய யானைப்படையுள்ள அரசர்கள் வணங்குமாறு; வென்றியின் விளங்கினான் - வெற்றியிலே மேமபட்டுச் சிறந்து திகழ்ந்தான். (எ - று.) இச்செய்யுளின் முன்னிரண்டடிகளில் சுவலனசடியின் அரசாட்சிச் சிறப்பும் வெற்றிச் சிறப்பும் கூறப்பட்டன. பின்னிரண்டடிகளில் மார்பின் செயற்கையணிநலம் கூறப்பட்டது. இங்கண் ஞாலம் - இவ்விடமாகிய உலகம். அங்கராகம் - மார்பில் பூசப்பெறும் நறுமணக் கலவைகள். | ( 20 ) | | |
|
|