கனக சித்திரன் உடைந்த தம் வீரரைக் கடிந்துரைத்தல்

1380. உருவிய வாளின னுடுத்த கச்சினன்
வெருவர விழித்தனன் 1வீரம் வேட்டுமா
டொருவனை யொருவனங் கஞ்சி யோடுமேல்
அருவருப் புடையதவ் வாண்மை 2யாகுமே.
     (இ - ள்.) உருவிய வாளினன் - வாட்படையை உறை கழித்தவனாய், உடுத்த
கச்சினன் - கச்சணிந்தவனாய், வெருவர விழித்தனன் - பகைவர் அஞ்சும்படி
விழித்தவனாய், வீரம் வேட்டு - ஆண்மையை விரும்பி, மாடு ஒருவனை - தன் பக்கலிலே
வந்தெதிர்ந்த பகைவன் ஒருவனை அஞ்சி, ஒருவன் - ஒரு மறவன், ஓடுமேல் -
புறங்கொடுத் தோடுவானாயின், அவ்வாண்மை - அவனுடைய அத்தகைய வீரம்,
அருவருப்புடையது ஆகும் - மற்றையோரால் பழிக்கத்தக்கது ஆகும், (எ - று.)

     வாளினனும், கச்சினனும், வெருவர விழித்தவனும், வீரம் வேட்ட வனுமாகிய ஒரு
மறவன், பகைவனை அஞ்சி ஓடுவானாயின், அவ்வீரனுடைய ஆண்மை கேட்டற்கே
அருவருப்புடையதென்றான், என்க.

(250)