இதுவுமது

1382. உடைந்தவர் மனங்களை யுருவ வீழ்த்திடு
மடந்தையர் வடிக்கணம் பல்ல வாய்விடின்
மிடைந்தவர் தொடங்கிய வீரக் 1கோட்டியுள்
அடைந்தவ ரடுபடைக் கஞ்சல் வேண்டுமோ.
     (இ - ள்.) உடைந்தவர் மனங்களை - போரிற் புறமிட்டு ஓடிய
ஆண்மையில்லாதோரின் நெஞ்சுகளை, உருவ - ஊடுருவிப் போம்படி, வீழ்த்திடும் -
தைத்து வீழ்த்துவனவாகிய, மடந்தையர் - பெண்டிர்களின், வடிக்கண் அம்பு அல்ல
ஆய்விடின் - இகழ்ந்து நோக்கும் வடிக்கப்பட்ட அக்கண்ணம்பு கட்கன்றி, மிடைந்தவர்
தொடங்கிய வீரக்கோட்டியுள் - செறிந்தவராய்ப் போர் தொடங்கிய மறவர் கூட்டத்தே,
அடைந்தவர் - போர் செய்யச் சென்ற மறவர்கள், அடுபடைக்கு - கொல் கருவிகட்கு,
அஞ்சல் வேண்டுமோ - அஞ்சுவதும் தகுமோ, (எ - று.)

     வீரர்கள், புறமிட்டோடிய தம்மைத் தம் பெண்டிர் இகழ்ந்து நோக்கும்
கண்ணம்புகட்கே அஞ்சவேண்டுமன்றிப் பகைவர் விடும் அம்புக்கு அஞ்சுதல் நாணுடைத்
தென்றான், என்க.

(252)