(இ - ள்.) விச்சை ஆய முற்றினான் - கல்வியறிவிலே தேர்ச்சி யடைந்தான், விஞ்சையார்கள் அஞ்ச நின்று - பிற வித்தியாதர மன்னர்கள் தனக்கு அஞ்சுமாறு நிலைபெற்று நின்று; இச்சை ஆய எய்தினான் - தான் விரும்பியவைகளெல்லாம் கைகூடப்பெற்றான்; ஏந்து செம்பொன் நீள்முடி - அணிந்துள்ள செம்பொன்னினால் ஆகிய நீண்டமுடியையும்; கச்சை யானை - கழுத்தில்கட்டும் கயிற்றையுடைய யானையையும்; மானவேல் - பெருமை பொருந்திய வேற்படையையும்; கண் இலங்கு தாரினான் - பெருமை பொருந்திய மலர்மாலையையும் அணிந்தவன்; வெச்சு எனும் சொல் ஒன்றுமே விடுத்து - சுடு சொல் ஒன்றையும் துவரவிடுத்து, மெய்ம்மை மேயினான் - உண்மை நெறியைக் கடைப்பிடித்தவன். (எ - று.) வெச்செனுஞ் சொல் - சுடுசொல். இதனை விடுத்து இன்சொல்லால் உலகோம்பினான் என்பது கருத்து. இதனால் சுவலனசடியின் கல்வியறிவும் குணநலமும் கூறப்பட்டன. வித்தியாதரர்கட்கு மாயவித்தைகளே சிறப்பான கல்வியாகும். ஈண்டுப் பொதுப்படஎல்லாக் கல்விகளையும்கொள்க. இனிமையுடனும் உண்மையுடனும் பேசுபவன் என்பது ஈற்றடிக்குப் பொருள். |