இது முதல் 16 செய்யுள்கள் ஒரு தொடர் | 1391. | வெருவிமுன் னுடைந்துபோய்ப் பெயர்ந்து வேற்றவர் ஒருவில்வா ளழுவம்வந் துந்து 1மப்படை உரவுநீ ரிருங்கட லோதம் போந்தபின் அரவநீர் வேலைமீ தலைப்ப தொத்ததே. | (இ - ள்.) முன் வெருவி உடைந்துபோய் - முன்னர் அஞ்சிப் புறமிட்டு ஓடிப்போய், பெயர்ந்து - மீண்டும், வேற்றவர் ஒருவு இல் - பகைவர்கள் நீங்காது நின்ற, வாள் அழுவம் வந்து - வாட்போர் உடற்றும் போர்க்களத்தே புகுந்து, உந்தும் அப்படை - போர் செய்யா நின்ற அவ்விஞ்சையர் படை, உரவு நீர் இருங்கடல் ஓதம் - மிக்க நீரையுடைய பெரிய கடலின் அலையொன்று, அரவநீர் வேலைமீது போந்தபின் - ஒலியுடைய நீரையுடைய கரைமீதுபோன பின், அலைப்பது ஒத்தது - மீண்டும் வந்து தாக்குதல் போன்றிருந்தது, (எ - று.) முன் உடைந்தோடிப் பின்வந்து போர் செய்யும் விஞ்சையர் படை கரையை எய்தியுடைந்த அலை மீண்டு வந்து தாக்குதல் போன்றிருந்தது என்பது கருத்து. ஓதம் - அலை. வேலை - கடற்கரை. | (261) | | |
|
|