1394. இலைதடு மாறின பகழி யெங்கணும்
சிலைதடு மாறின சிலைத்த தேர்க்குழாம்
மலைதடு மாறின போல மான்றரோ
தலைதடு மாறின தடக்கை வேழமே.
     (இ - ள்.) இலை தடுமாறின பகழி - அம்புகள் தம் இலைகளோடு பகையம்பின்
இலைகள் தாக்கித்தள்ளாடின, எங்கணும் - போர்க்களமெங்கும், சிலைதடுமாறின -
வில்லொடு வில் பொருது தள்ளாடின, தேர்க்குழாம் சிலைத்த - தேர்க்கூட்டங்கள்
ஒன்றோடொன்று மோதி முழங்கின, தடக்கை வேழம் - வலிய துதிக்கையையுடைய
யானைகள், மான்று - போர் செய்து மயங்கி, மலைதடுமாறினபோல - மலைகள்
தள்ளாடுவது போன்று, தலை தடுமாறின - தலை தள்ளாட்டம் கொண்டன, (எ - று.)

     அவ்வழி, அம்புகள் தடுமாறின, விற்கள் தள்ளாடின, தேர்கள் ஆரவாரித்தன,
யானைகள் மயங்கித் தடுமாறின என்க.

(264)