1397.

பெருகிய குருதியுட் பிறங்கு செந்தடி
அருகுடை யளற்றினு ளழுந்திப் பாகமே
சொரிகதிர்க் கோடக முடிக டோன்றலால்
பொருகளம் புற்றெடுக் கின்ற 1போலுமே.
     (இ - ள்.) பெருகிய குருதியுள் - பெருக்கெடுத்தோடும் குருதி வெள்ளத்தே, பிறங்கு
செந்தடி - விளங்குகின்ற செவ்விய ஊனாகிய, அருகுடை - பக்கத்தே உளதாகிய,
அளற்றினுள் - சேற்றிடத்தே, பாகமே அழுந்தி - ஒரு பகுதி மாத்திரையே புதையுண்டு,
சொரிகதிர் கோடக முடிகள் தோன்றலால் - பொழிகின்ற ஒளியை உடைய கோடகமாகச்
செய்யப்பட்ட முடிகள் காணப்படுதல் உண்மையின், பொருகளம் - அப்போர்க்களமானது,
புற்று எடுக்கின்ற போலும் - புற்றுக்களைத் தன்பால் தோற்றுவனபோலத் தோன்றா நிற்கும்,
(எ - று.)

     கோடகமுடியின் ஒரு பகுதி புதையுண்டு ஒருபகுதி மேலே தோன்றுதல், புற்றுக்கள்
தோன்றுவன போன்று காணப்பட்டன என்பதாம்.

     கோடகமுடி - ஐந்துவகை முடிக்கலன்களுள் ஒன்று. அவையாவன:- தாமமுடி,
முகுடமுடி, பதுமமுடி, கோடகமுடி, கிம்புரிமுடி என்பன. இவற்றுள் கோடகமுடி
சிகரவடிவிற்று ஆகலின் புற்று உவமையாயிற்று என்க.

(267)