முல்லை நிலம்

14. ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர்
கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல்
காறு கொண்டவர் கம்பலை யென்றிவை
மாறு கொண்டுசி லம்புமொர் மாடெலாம்.1
 
     (இ - ள்.) ஏறு கொண்டு - பணையம் வைத்துவிட்ட கொல்லேற் றினைத்
தழுவிக்கொண்ட வென்றி குறித்து; எறியும்பணை - அடிக்கின்ற ஏறங்கோட்பறையையுடைய;
கோவலர் - இடையர்கள்; கூறுகொண்டு எழு - இசைகளின் வகைகளைக் கொண்டு
எழுகின்ற; கொன்றை அம் தீம் குழல் - கொன்றைப் பழத்தாலாகிய அழகிய இனிய
இசையையுடைய குழலென்னும் ஊதுகருவியின் இசையும்; காறு கொண்டவர் கம்பலை - ஏர்
உழுகின்ற ஆயர்கள் ஆரவாரமும்; என்றஇவை - என்கிற இவைகள்; ஒர் மாடு எலாம் -
ஒரு பக்கமாகிய முல்லைநிலத்தின் எவ்விடத்தும்; மாறுகொண்டு சிலம்பும் - ஒன்றின் ஒன்று
மாறுபடுதலைக் கொண்டு மிகுந்தொலிக்கும். (எ - று.)

     காறு - கொழு - அஃது ஏருக்கு ஆகுபெயராய் நின்றது. ஆயருள் ளும்
உழுதுண்போர் உளராகலின், இங்ஙனம் கூறினர்.

     ஏறுகொண்டெறியும் பணை - ஏறுகோட்பறை. கோவலர், கோக்களை (ஆக்களை)ப்
பாதுகாத்தலில் வல்லமையுடைமை பற்றிவந்த காரணப்பெயர் என்பர். கொன்றையந்
தீங்குழல், கொன்றைப்பழத்தைக் குடைந்துசெய்த இசைக்கருவி. “கொன்றையந் தீங்குழல்
கேளாமோ தோழி“ என்பது சிலப் பதிகாரம். “கொன்றைப்பழக் குழற் கோவலர்“ என்பது
வளையாபதி. 'கம்பலை' ஒலியை உணர்த்தும் உரிச்சொல்; “கம்பலை சும்மை கலியே
யழுங்கல்; என்றிவை நான்கும் அரவப் பொருள“ என்பது தொல்காப்பியம்.

( 14 )