அம்மன்னவன்பால் ஒரு குற்றம்
வேறு
140. வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவ
னொற்றை யந்தனிக் கோலுல கோம்புநாள்
குற்ற மாயதொன் றுண்டு குணங்களா
லற்ற கீழுயிர் மேலரு ளாமையே.
 

     (இ - ள்.) வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்து அவன் - வெற்றிக்கு
அறிகுறியான வெண்கொற்றக் குடையையுடைய அந்த வித்தியாதர அரசன்; ஒற்றை அம்
தனிக்கோல் - ஒப்பற்ற அழகிய தனிமையான தனது செங்கோலினால்; உலகு ஓம்பும்நாள் -
உலகத்தைப் பாதுகாக்குங்காலத்தில்; குற்றம் ஆயது ஒன்று உண்டு - அவனிடத்திலே ஒரு
குற்றம் உள்ளது அதுயாதெனில்; குணங்களால் அற்ற - நற்குணங்களில்லாத; கீழ்
உயிர்மேல் அருளாமையே - சிறுமையையுடைய உயிர்களிடத்திலே அருள்
செய்யாமையாம், (எ - று.)

     கீழ்உயிர் என்றது கீழ்மக்களும் கொடியவிலங்குகளும் ஆம். இதனால்,
சுவலனசடியின்மேல் போலிக் குற்றம் ஒன்றினைக் கற்பித்து அவனுடைய நல்லியல்புகளை
விளக்கினார். எல்லாவுயிர்கண் மாட்டுஞ் செய்யற்பாலதாகிய அருளை, நற்குணங்கள் அற்ற
கீழ்மக்களிடத்திலே சுவலனசடி செய்யாமை யாகிய குற்றம் ஒன்று உளது என்பதாம்.
இத்தகைய பழிப்பினால் மன்னவனுடைய பெருமை விளக்கப்பட்டது. இதனை வஞ்சப்
புகழ்ச்சியணி என்பர். முதலடி முற்றுமோனை.
 

( 22 )