1403. அணியமு மாரமுங் கொடிஞ்சுங் கோலுமாத்
துணிவினைக் கவனமாத் துரக்கும் பாகரா
மணியவிர் தேரெனு மதலை நாயகர்
பணிவருங் குருதிநீர்ப் பவ்வத் தோட்டினார்.
     (இ - ள்.) அணியமும் ஆரமும் கொடிஞ்சும் கோலுமா - மரக்கலத்திற்குரிய
அணியமும் ஆரமுமாகத் தேரின் கொடிஞ்சையும் கோலையும்கொண்டு, துணிவினை கவனமா
துரக்கும் பாகரா - தெளிந்த தொழிற்றிறமுடைய புரவிகளை மீகான்களாகக்கொண்டு, மணி
அவிர் தேர்எனும் - மணிகள் விளங்கும் தேர் ஆகிய மரக்கலங்களை, நாயகர் -
தலைவர்கள், பணிவு அரும் குருதிநீர்ப் பவ்வத்து ஓட்டினார் - குறைதலில்லாத குருதியாகிய
நீரையுடைய கடலிலே செலுத்தா நின்றனர்,
(எ - று.)

     அணியம் ஆரம் என்பன மரக்கல உறுப்புக்கள். மீகான் - மரக்கல மியக்குவோன்.
மதலை - மரக்கலம்.

     குருதிக் கடலுள் குதிரைகள் மாலுமிகளாக, தேர்வீரர்களாகிய மரக்கலத் தலைவர்கள்
தம் தேர்களாகிய மரக்கலங்களை இயக்கினர் என்க.

(273)