1404. நுதலிய 1செருநில நொறிற்செந் நீரினுண்
முதலையின் முதுகென நிவந்த தோற்பரங்
கதலிகை காம்பொடு 2கடுகித் தாமரை
3மதலையந் தாளணை வாளை போன்றவே.
 
     (இ - ள்.) நுதலிய - குறிக்கப்பட்ட, செருநிலம் - போர்க்களத்தில், நொறில் -
விரைந்த செலவினையுடைய, செந்நீரினுள் - குருதி வெள்ளத்தூடே, முதலையின் முதுகு என
நிவந்த - முதலையின் முதுகுபோன்று உயர்ந்தனவாகிய, தோற்பரம் - கேடகம், கதலிகை
காம்பொடு கடுகி - கொடிகளின் கழிகளோடு நெருங்கி, தாமரை - தாமரைமலரின்,
மதலையந்தாள் அணை - ஊற்றுக்கோலாகிய நாளத்தை அணையாநின்ற, வாளைபோன்ற -
வாளை மீன்களை ஒத்தன, (எ - று.)

     தோற்பரம் கதலிகைக் காம்பொடு கடுகித் தாமரைத் தாளணை வாளை போன்ற என
இயைக்க. தோற்பரம் - கிடுகு. மதலை - சார்பு - ஊற்றுக்கோல்.

(274)