1407.

துளைப்படு புண்ணுமிழ் 3சோரி பாய்ந்தெழக்
களிப்படு சிலம்பின கவந்த மாடுவ
முளைப்புடை முடைத்திடை சுடர மூட்டிய
விளக்கிடு 4குற்றியின் விரிந்து தோன்றுமே.
     (இ - ள்.) துளைப்படு புண்உமிழ் - படைகள் பாய்ந்த துளைகளையுடைய புண்கள்
காலுகின்ற, சோரி - குருதி, பாய்ந்து எழ - பொங்கி எழாநிற்ப, களிப்படு சிலம்பின -
களித்து ஆரவாரமுடையனவாய்,கவந்தம் ஆடுவ - குறைப்பிணங்கள் ஆடுகின்ற காட்சி, முளைப்பு உடைமுடைத்திடை - தோன்றுதலையுடைய ஊன் குவியலாகிய திடரின்மேல், சுடரமூட்டிய - ஒளிரும்படி கொளுத்திய, விளக்கிடு குற்றியின் - விளக்குகள் வைக்கப்பட்ட தண்டுகள் போன்று, விரிந்து தோன்றுமே - தலையிடத்தே விரிவுடையனவாய்க் காணப்படும் (எ - று.)

     முடை - ஊன் - திடை - திட்டை : விகாரம்; திடர்.

     குருதி பொங்க நின்று ஆடும் குறைத்தலைப் பிணங்கள், விளக்குத் தண்டுபோல்
தோன்றின என்க. 

(277)