(இ - ள்.) செம்பொன் நீள் முடியான் - சிவந்த பொன்னினால் ஆகிய நீண்ட முடியையுடையவனும்; செருவின் தலை வெம்பு வேலவன் - போரினிடத்திலே சினக்கின்ற வேற்படையை யுடையவனுமாகிய அந்தச் சுவலனசடி மன்னன்; விஞ்சையர் மண்டிலம் நம்பி ஆள்கின்ற நாளில் - வித்தியாதர உலகத்தை விரும்பி அரசாட்சி செய்கின்ற காலத்திலே; நடுங்கின - நடுங்கியவைகள்; கம்பம் மாடம் கதலிகைபோலும் - தூண்கள் பொருந்திய மாளிகைகளின்மேல் நாட்டப்பெற்ற கொடிகளேயாம், (எ - று.) வெற்றிக்கு அறிகுறியாக மாடமாளிகைகளின்மேல் நாட்டிய துகிற்கொடிகள் காற்று வீசுதலால் அசையுமே யல்லாமல், அவன் அரசாளும் நாட்டில் துன்பத்தால் உள்ளமும் உடலும் நடுங்கும் உயிர்கள் எவையும் இல்லையென்பதாம். இவ்வாறு பிற ஆசிரியர்களும் கூறுதலை “அடிமிசை முறையிட்டென்றும் அரற்றுவ சிலம்பே“ என்னும் நைடதம் முதலிய இடங்களிற் காண்க. ஈண்டுக் கூறப் பெறும் போலும் என்பது ஒப்பில் போலி. |