மணிகண்டன் நிற்க ஏனைய நால்வரும் மாய்தல்

1418. வனைகதி ரிலங்குதோள் வயிர கண்டனோ
டனைவரு மலாயுதற் கமர்தொ லைந்ததும்
கனகசித் திரனது பாடுங் 1கண்டரோ
அனல்2்படு மனத்தனங் கொருவ னாயினான்.
     (இ - ள்.) வனைகதிர் இலங்குதோள் - புனைந்த அணிகலன்களின் ஒளிதிகழ்கின்ற
தோளையுடைய, வயிரகண்டனோடு - வயிரகண்டன் என்பானோடு, அனைவரும் -
ஏனையோர் அனைவரும், அலாயுதற்கு - விசயனுக்கு, அமர் தொலைந்ததும் - போர்
செய்ய ஆற்றாது இறந்து தீர்ந்தமையும், கனகசித்திரனது பாடும் கண்டு - கனக சித்திரன்
மாண்டமையும், கண்கூடாக் கண்டு, அங்கு ஒருவன் - அவ்விடத்தே எஞ்சிய மணிகண்டன்
என்பான், அனல் படு மனத்தன் ஆயினான் - சினத்தீயாற் றீய்க்கப்பட்ட
நெஞ்சமுடையவன் ஆயினான், (எ - று.)

     அச்சுவகண்டன் தம்பியருள் மூத்தவனாகிய மணிகண்டன் நிற்க ஏனையோரும்
கனகசித்திரனும் மாண்டமை கண்டு மணிகண்டன் மிக்க சினமுடையன் ஆனான் என்க.

(288)