ஆடவர்மேல் வளைந்த வில்

142.

மின்னு வார்ந்தமந் தாரவி ளங்கிணர்
1துன்னு தொன்முடி யானொளி சென்றநாள்
மன்னு மாடவர் 2மேல்வளைந் திட்டன
பொன்ன னார்புரு வச்சிலை போலுமே.
 

     (இ - ள்.) மின்னு ஆர்ந்த - மின்னொளி பொருந்திய; மந்தார - மந்தாரையின்;
விளங்கு இணர் துன்னு தொன்முடியான் - விளங்குகின்ற பூங்கொத்துக்கள் பொருந்திய
பழைமையான முடியையுடைய அரசன்; ஒளி சென்றநாள் - ஆணை நடந்த காலத்திலே;
மன்னும் ஆடவர்மேல் வளைந் திட்டன - நிலைபெற்ற சீர்த்தியையுடைய
இளைஞர்களின்மேல் வளைந் தவைகள்; பொன் அனார் புருவச்சிலை போலும் - அழகால்
திருமகளை யொத்த மங்கையர்களின் புருவமாகிய விற்களேயாம், (எ - று.)

     சுவலனசடியின் ஆட்சிக்காலத்தில் அந்நாட்டில் விற்போர்யாண்டும் இல்லையென்பது
இச்செய்யுளால் உணர்த்தப்பட்டது. ஒளி ஈண்டு ஆணை. “உறங்குமாயினு மன்னவன்
தன்னொளி கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்“ என்றார் சீவக சிந்தாமணியினும் (248)
போலும் என்பது ஈண்டும் ஒப்பில் போலியே.
 

( 24 )