விசயன் படை புறமிட்டு ஓடுதல் | 1420. | வரிந்துவீழ் கச்சையன் வனைந்த தாடியன் முரிந்தெழு புருவத்தன் முழங்கு தீயென எரிந்தன னிறுவரை யெடுத்து மேற்செல விரிந்தது சுரமைய ரிறைவன் றானையே. | (இ - ள்.) வரிந்து வீழ் கச்சையன், வரிந்துகட்டி ஒருபுறத்தே தொங்கவிடப்பட்ட கச்சையுடையவனாய், வனைந்த தாடியன் - முறுக்கி மேலேற்றப்பட்ட மீசையை உடையனாய், முரிந்துஎழு புருவத்தன் - வளைந்து நெற்றியில் ஏறிய புருவங்களையுடையனாய், முழங்கு தீஎன எரிந்தனன் - ஒலிபட எரிகின்ற ஊழித் தீயைப் போன்று சினத்தீக் கால்பவனாய், இறுவரை எடுத்து - அப்பெரிய மலையை ஏந்திக்கொண்டு, மேற்செல - அம்மணிகண்டன் பகைவர் மேலே சென்றானாக, சுரமையர் இறைவன் தானை இரிந்தது - பயாபதி மன்னன் படை முழுதும் அது கண்டு அஞ்சிப் புறங்கொடுத்தோடிற்று. (எ - று.) மணிகண்டன் மலை பெயர்த்துத் தூக்கிவருதல் கண்ட சுரமை நாட்டினர் படைமுழுதும் புறங் கொடுத்தோடிற் றென்க. | (290) | | |
|
|