மணிகண்டன் இறத்தல்

1422. தொடுத்ததுந் துரந்ததும் விடலை தோளிடை
மடுத்ததுங் கிழித்தது மண்ணி னுட்புகக்
கடுத்ததுங் கண்டுநின் றவர்க டம்மையும்
படுத்தது பகலவன் பகழி யென்பவே.
     (இ - ள்.) தொடுத்ததும் - அருக்ககீர்த்தி அவ்வம்பினை வில்லிலே தொடுத்ததையும்,
துரந்ததும் - அதனை ஏவியதையும், தோளிடை மடுத்ததும் - அது மணிகண்டன் தோளிற்
பாய்ந்ததையும், கிழித்ததும் - அத்தோளைப் பிளந்ததையும், மண்ணின் உட்புக - நிலத்தில்
ஊடுருவிச் செல்ல, கடுத்ததும் - மேலும் விரைந்ததையும், கண்டு நின்றவர்கடம்மையும் -
அயனின்று பார்த்திருந்தோரையும், படுத்தது - கொன்றொழித்தது, பகலவன் பகழி என்ப -
அவ்வருக்க கீர்த்தியின் அம்பு என்று - அறிந்தோர் உரைப்பர், (எ - று.)

     அவ்வம்பு, விடுத்ததையும் அது மணிகண்டன் தோள் துணித்ததையும் பின்னர்
மண்ணினுட்குளித்ததையும் கண்டு நின்ற பகைவரையும் கொன்றதென்க.

(292)