(இ - ள்.) அம்பொன் செய் ஆழியானுக்கு - அழகிய பொன்னாலியன்ற உருட்படையுடைய அச்சுவகண்டனுக்கு. அரக்கு உண் கோலார் - அரக்கூட்டிய கோலையுடைய தூதர்கள், விரைவின் ஓடி - விரைந்து ஓடிச்சென்று, செம்பினை வெய்தாய் உருக்கி - செம்பை மிக்க வெப்பமுடையதாக உருக்கி, செவி முதல் சொரிந்ததேபோல் - காதுகளிலே பெய்தாற்போலே, தம்பியர் பாடும் - மணிகண்டன் முதலிய நான்கு தம்பியரும் மாண்டமையும், மக்கள் இறந்ததும் - கனகசித்திரன் முதலிய தன் மக்கள் இறந்தமையும், தனக்குப் பாங்காய் - தனக்குத் துணையாகச் சென்ற, வெம்பியவீரர் - சினங்கொண்ட தன் மறவர் பலர், விளிந்ததும் - மாண்டமையும், உரைத்தனர் - எடுத்தியம்பினர், (எ - று.) அப்பொழுது மணிகண்டன் முதலிய தம்பிமார்களும் கனகசித்திரன் முதலிய மக்களும் ஒருசேர மாண்டார் என்று அச்சுவகண்டனுக்குத் தூதர் உணர்த்தினர்; அத்தூதர் கூறிய சொற்கள் தன் காதில் செம்புருக்கினை வெய்தாய் ஊற்றினாற் போன்று சுட்டது என்க |