சண்டவேகையின் செயல்

1428. அணங்குகள் குழுமி யாமும்
     பெருவயி றார்து மென்று
துணங்கைகோத் தாடி
     நக்குச் சுடரிலைச் சூல மேந்தி
வணங்குபு சூழ மற்ற
     மாபெருந் தெய்வம் வந்து
மணங்கமழ் சுரமை
     நாடன் றானைமேன் 3மடுத்த தம்மா.
     (இ - ள்.) அணங்குகள் - அச்சண்டவேகையைச் சார்ந்த பேய்க்கணங்களும், குழுமி -
ஒன்றுகூடி, யாமும் - யாங்களும் பெருவயிறு ஆர்தும் என்று - நம் பெரிய வயிறு நிறைய
இன்று உண்ணக்கடவேம் என்று மகிழ்ந்து, கோத்து துணங்கை ஆடி நக்கு - கைகோத்துத்
துணங்கைக்கூத்தினை யாடிப் பெருகச் சிரித்து, சுடர்இலைச் சூலம் ஏந்தி - ஒளிருகின்ற
இலையினையுடைய சூலப்படையை ஏந்தியவாய், வணங்குபு - சண்டவேகையைத் தொழுது,
சூழ - புறஞ்சூழ்ந்துவர, மற்ற மாபெருந் தெய்வம் - அந்தத் தலைமையுடைய
பெரும்பேயாகிய சண்டவேகை, வந்து - விரைந்து வந்து, மணங்கமழ் சுரமைநாடன்
தானைமேல் - நறுமணங்கமழும் பொழில்மிக்க சுரமை நாட்டு மன்னனாகிய திவிட்டனுடைய
படையின்மேல், மடுத்தது அம்மா - தாக்கிற்று. அம்மா : அசை, (எ - று.)

     “பழுப்புடை யிருகை முடக்கி அடிக்கத்
     துடக்கிய நடையது துணங்கை யாகும்“.
     - (திருமுருகாற் - 56 உரை)

     கூளிகள், யாமும் பெருவயிறு ஆர்தும் என்று, கோத்தாடி நக்கு, ஏந்திச் சூழ, மற்ற
மாபெருந்தெய்வம் வந்து நாடன் தானைமேல் மடுத்ததென்க.

(298)