உண்ணாத வாய்கள்

143. வெண்ணி லாச்சுட ருந்தனி வெண்குடை
எண்ணி லாப்புக 3ழானினி தாண்டநா
ளுண்ணி லாப்பல வாயுள வாயின
கண்ண னாரொடு காமக்க லங்களே.
 

     (இ - ள்.) வெள் நிலாச் சுடரும் - வெள்ளிய திங்களொளியை வெளிப்படுத்தும்;
வெண்குடை - வெண்கொற்றக் குடையையும்; எண்இலாப் புகழான் - எண்ணற்ற
புகழையுமுடையவனாகிய சுவலனசடி மன்னன்; இனிது ஆண்டநாள் - இனிமையோடு
அரசாட்சி செய்துகொண்டிருந்த காலத்திலே; உண் இலாப் பல வாய் உளவாயின -
உண்ணுதலற்ற பல வாய்கள் உளவாயிருந்தன; அவையாவை எனின்; கண் அனார்
ஒடுகாமக் கலங்கள் - கண்ணையொத்த காதலர்களொடு இன்பம் நுகரப்பெறாத
காமக்கலங்களாகிய பரத்தையர் வாய்களேயாம், (எ - று.)

     சுவலனசடியின் ஆட்சிக்காலத்தில் அந்நாட்டில் பசியினால் வருந்தினார் எவரும்
இலர். காமக்கலங்களாகிய பரத்தையர்களின் வழியிலே ஒழுகுவார் எவரும் இலராயினார்.
ஆகவே அப்பரத்தையர் கண்ணன்ன காதலரோடு காமச்சுவையை உண்டுகளிக்கும்
வாயற்றுத் திகைக்கின்றனர். காமக்கலங்கள் - காமப்பொருள் வைக்கப்பட்ட பாத்திரங்களைப்
போன்றவர்களாகிய பரத்தையர்கள்.

 

( 25 )