இதுவுமது | 1432. | மருங்கவை புணர்த்த பின்னை வானக வளாக மெல்லாம் கருங்கலொன் றகன்ற மேலாற் கவித்தது கவித்த லோடும் இருங்கலி யுலக மெல்லா மிருள்கொள வெருவி நோக்கிப் பொருங்கலி யரசர் தானை போக்கிட மற்ற தன்றே. | (இ - ள்.) மருங்கவை புணர்த்த பின்னர் - பக்கத்தே அம் மாயத் தொழில்களைச் செய்த பின்னர், வானக வளாக மெல்லாம் - விசும்பு வட்டம் முழுதையும், அகன்ற கருங்கல் ஒன்று - அகலிதாய கரிய மலை ஒன்றனாலே மேலால் கவித்தது - மேற்புறத்தே குடைபோன்று கவித்தது, கவித்தலோடும் - அவ்வாறு கவிழ்த்தவுடனே, இருங்கலி உலகம் எல்லாம் - பெரிய ஆரவாரத்தையுடைய இவ்வுலக முழுதும், இருள்கொள - பேரிருள் கவ்விக்கொண்டதாக, வெருவி நோக்கி - அஞ்சி நான்கு பக்கத்தும் நோக்கி, பெருங்கலி அரசர்தானை - பெரிய முழக்கத்தையுடைய திவிட்டனைச்சார்ந்த அரசருடைய படை, போக்கிடம் அற்றது அன்றே - தாம் உய்ந்து போதற்குரிய இடமும் பெறாதாயிற்று, (எ - று.) இவ்வாறு செய்த பின்னர் மீண்டும் அச் சண்டவேகை அகன்ற ஒரு மலையைக் கொணர்ந்து மேலே கவிழ்த்தது ஆதலால் உலகெலாம் இருண்டது. திவிட்டன் படைஞர் உய்ந்து போதற்கு இடமும் பெறாதவராயினர் என்க. | (302) | | |
|
|