திவிட்டன் அருக்ககீர்த்தியை நகுதல்

1435.

3செற்றலன் விடுத்த பின்றைச்
     செகுத்துயிர் பருகினல்லான்
மற்றிது மறித லில்லை
     மறிப்பவர் பிறரு மில்லை
இற்றித னிலைமை யென்ன
     விருங்கடல் வண்ண னக்காங்
கற்றமி லலங்கல் வேலோ
     யஞ்சினை போறி யென்றான்.

     (இ - ள்.) மற்றிது - இச்சண்டவேகை என்னும் தெய்வம், செற்றலன் விடுத்த பின்றை
- நம் பகைவனாகிய அச்சுவகண்டன் ஏவிவிட்ட பின்னர், செகுத்து உயிர் பருகின்
அல்லால் மறிதலில்லை - பகைவர்களைக் கொன்று அவர் உயிர்குடித்து மீள்வதன்றி வாளா
மீள்வதின்றாம், பிறரும் - வேறு யாரும், மறிப்பவர் இல்லை - அதனைத் தடுக்கும்
ஆற்றலுடையோரும் இவ்வுலகில் இலர், இதன் நிலைமை இற்று - இத்தெய்வத்தின் இயல்பு இத்தன்மைத்து, என்ன - என்று அருக்ககீர்த்தி இயம்ப, இருங்கடல் வண்ணன் நக்கு - திவிட்டன் சிரித்து, ஆங்கு - அவ்வண்ணம், அற்றம் இல் அலங்கல் வேலோய் - சோர்வு இல்லாத வெற்றி மாலையை உடைய வேற்படையோனே, அஞ்சினை போல்தி என்றான் - நீ மிக அஞ்சிவிட்டாய் போலும் என்று இயம்பினான், (எ - று.)

     மேலும், அருக்ககீர்த்தி, “இச் சண்டவேகை அச்சுவகண்டன் கருதியபடி உயிர்களைப்
பருகி ஒழிவதன்றி, வாளா மீளாது ; அதைத் தடுக்கும் ஆற்றலுடையோரும் இலர்,
என்றானாக, நம்பி அவனை நகைத்து நீ பெரிதும் அஞ்சினை போலும் என்றான் என்க.

(305)