திவிட்டனின் தோற்றம்

1438. நெதிசொரி சங்க மேந்தி
     நெடுஞ்சிலை யிடங்கைக் கொண்டு
விதிதரு நீல மேனி
     விரிந்தொளி துளும்ப நின்றான்.
மதியொரு பால தாக
     வானவின் மருங்கு கோலிப்
புதியதோர் பருவ மேகம்
     போந்தெழு கின்ற தொத்தான்.
     (இ - ள்.) நெதிசொரி சங்கம் ஏந்தி - தன்னை அடைந்தார்க்கு வேண்டியாங்கு
நிதிகளைப் பொழிகின்ற வலம்புரிச் சங்கு வலக்கையின் ஏந்தி, இடங்கை - இடக்கையிலே,
நெடுஞ்சிலை கொண்டு - நெடிய வல்வில்லை ஏந்திக்கொண்டு, விதிதரு நீல மேனி -
ஊழாலே தரப்பட்ட நீலவண்ணமுடைய திருமேனி, விரிந்து ஒளி துளும்ப நின்றான் -
நாற்புறத்தும் விரிந்து ஒளி பரவும்படி நின்றவனாகிய திவிட்டன், புதியதோர் பருவமேகம் -
புதுமையுடைய முதிர்ந்த முகில் ஒன்று, மதி ஒரு பாலது ஆக - முழுத்திங்கள் ஒரு புறத்தே
அமையப் பெற்றதாய், வானவில் மருங்குகோலி - மற்றொரு பக்கத்தே இந்திரவில்லை
வளைத்துக் கொண்டு, போந்து எழுகின்றது ஒத்தான் - வந்து தோன்றுவதனை
ஒத்திருந்தான், (எ-று.)

     ஒருபுறத்தே வெளிய வலம்புரியினையும், மற்றோரு பக்கத்தே நெடிய வில்லையும்
கொண்டு நின்ற நீலநிறமுடைய நம்பி, ஒருபுறத்தே திங்கள் பொருந்த, ஒருபுறத்தே
வில்லிட்டுத் திகழாநின்ற பருவமேகம் ஒன்று புதிதாக வந்து தோன்றினாற் போன்று
திகழ்ந்தான் என்க.

     வலம்புரி - பாஞ்சசன்னியம். சிலை - சார்ங்கம்.

(309)