திவிட்டன் உங்கரித்தலும்,
சண்டவேகை தன்னுருக்கோடலும்

1439. வலம்புரி சிலம்ப வாய்வைத்
     திருஞ்சிலை வளைய வேற்றிக்
கலம்புரி கனபொன் னாழி
     கைவிரல் கதிர்ப்பச் சூட்டி
உலம்புரி வயிரத் தோளா
     னுரப்பினா னுரப்ப லோடும்
சலம்புரி தெய்வ மஞ்சித்
     தன்னுரு வடைந்த தன்றே.
     இ - ள்.) வலம்புரி சிலம்ப வாய்வைத்து - அவ்வலம் புரிச்சங்கம் முழங்கும்படி தனது
திருவாயிலே வைத்து, இருஞ்சிலை வளைய ஏற்றி - பெரிய வில்லை நன்கு வளையும்படி
நாண் ஏற்றி, கலம்புரி கனபொன் ஆழி - அணிகலன் செய்யும் கனவிய பொன்னாலாகிய
உருட்படையை, கைவிரல் கதிர்ப்பச் சூட்டி - தன் விரல்கள் ஒளி படைக்கும்படி அணிந்து,
உலம்புரி வயிரத் தோளான் - திரள்கற் போன்ற திண்ணிய தோளையுடைய திவிட்டநம்பி,
உரப்பினான் - உங்கரித்தான், உரப்பலோடும் - உங்கரித்தவுடனே, சலம்புரி தெய்வம் -
வஞ்சப்போர் செய்யும் அச் சண்ட வேகை என்னும் தெய்வம், அஞ்சி - அச்சமுற்று, தன்
உரு அடைந்தது அன்றே - தன்னுடைய உண்மை உருவத்தை எய்திற்று, அன்று, ஏ :
அசைகள், (எ - று.)

     அவ்வாறு திகழ்ந்த நம்பி வலம்புரியை முழக்கி வில்லை நாணேற்றி ஆழிப்படையை
விரல்களிலே செறித்து நின்று, உங்காரஞ் செய்த துணையானே அப்பேய் அஞ்சித் தனது
உண்மை உருவினை எய்திற்றென்க.

(309)