திவிட்டன்பால் கருடன் வந்து எய்துதல்

1443. வாய்ந்தநல் வயிரத் துண்டம்
     வளைந்தொளிதுளும்ப வள்ளாற்
சேந்தன சிறுக ணோடு
     திசைமுகஞ் சிறகு தம்மால்
வேய்ந்தென விரித்து வீசி
     விசும்பிடை யிழிந்து வந்து
காய்ந்தெரி கணையி னாற்குக்
     கருடனு முழைய னானான்.
      (இ - ள்.) வாய்ந்த நல் வயிரத்துண்டம் - பொருந்திய நல்ல வயிரமணி போன்ற
உறுதியுடைய அலகு, வளைந்து ஒளி துளும்ப - வளைவுடனே ஒளிவீசாநிற்ப, சேந்தன வள்
ஆல் சிறுகணோடு - சிவந்தனவாய்க் கூரிய நோக்குடைய சிறிய கண்களோடே, சிறகு
தம்மால் - தன் இரண்டு சிறகுகளாலும், திசை முகம் வேய்ந்தென, திக்குகளை
மூடினாற்போல, விரித்து - பரப்பி, வீசி - அடித்து, விசும்பிடை இழிந்து வந்து -
வானத்தினின்றும் இறங்கி வந்து, கருடனும் - கருடன் என்னும் பறவைவேந்தனும், காய்ந்து
எரிகணையினாற்கு - சினந்து சுடுதலையுடைய அம்புகளையுடைய திவிட்டனுக்கு, உழையன்
ஆனான் - அணுக்கன் ஆயினான், (எ - று.)

     வள் - கூர்மை. ஆல் : அசை. அப்பொழுது அலகு ஒளிவீசச் சிறகுகள் திசையை
மூட விரித்து வீசியவனாய் வானிடத்தேயிருந்து இறங்கிக் கருடனும் நம்பிபால் எய்தினான்
என்க.

(313)