திவிட்டன் விசும்பில் அச்சுவகண்டனை எதிர்தல் | 1444. | கருடனை வலங்கொண் டேறிக் கார்முகங் கையி னேந்தி மருடரு விசும்பி னேறி மணிவண்ண னெதிர்ந்த போழ்தில் இருடனக் கெய்திற் றோரா னெரிகதி ராழி வேந்தன் பொருடனக் கினியி லாத 1புகழுரை புகல லுற்றான். | (இ - ள்.) கருடனை வலங்கொண்டு ஏறி - அணுக்கனாய் வந்தெய்திய அக்கருடனை வலமாகச் சுற்றி வந்து ஏறிக்கொண்டு, கார்முகம் கையின் ஏந்தி - வில்லையும் ஏந்திக்கொண்டு, மருள் தரு விசும்பின் ஏறி - வியப்பைத் தருகின்ற விண்ணிலே உயர்ந்து, மணிவண்ணன் - திவிட்டநம்பி, எதிர்ந்த போழ்தில் - அச்சுவகண்டனை எதிர்த்த பொழுதில், இருள் தனக்கு எய்திற்று ஓரான் - தனக்குச் சாக்காடு வந்து எய்தியதனைத் தெளியாதவனாய், எரிகதிர் ஆழிவேந்தன் - எரிகின்ற சுடரையுடைய ஆழிப்படை தரித்த அவ் வச்சுவகண்டன், பொருள் தனக்கு இனியிலாத புகழுரை புகலல் உற்றான் - இதுகாறும் பொருளுடைத்தாயினும் இனிச் சிறிதும் பொருள் பயத்தலில்லாத தற்புகழ் மொழியைப் பாரித்துப் பேசலானான், (எ - று.) இருள் - பொறிகள் இருள வருகின்ற சாவு. அச்சுவகண்டன் புகழ் இதுகாறும் பொருளுடையதே எனினும், இன்று தொடங்கிப் பொருளிலதாம் என்பார் “பொருள் தனக்கு இனியிலாத புகழுரை“ என்றார். நம்பியும் கருடனை ஏறி விசும்பிடை உயர்ந்து அச்சுவகண்டனை எதிர்த்தானாக, தனக்கு முடிவுகாலம் எய்துவதறியாதவனாய் அவன் பொருளிலாத தற்புகழுரைகளை மொழியலானான் என்க. | (314) | | |
|
|