அச்சுவகண்டனின் தற்புகழ் | 1445. | தானவர் நின்னைப் போலத் தந்திற லறிவி லாதார் ஈனவ ரிரங்கி வீழ்ந்தா ரேனையர் தொழுது வாழ்ந்தார் வானவ ரென்னை யஞ்சி வானிடை மறைந்து செல்வார் ஊனவர் தம்மு ணீயே யுயிரெனக் கிழக்க லுற்றாய். | (இ - ள்.) தானவர் - அசுரர்கள், நின்னைப்போல - அடே திவிட்டனே உன்னைப்போலவே, தந்திறல் அறிவிலாதார் - தம்முடைய வலிமையின் பெருமை சிறுமைகளைத் தாமே தேர்ந்து தெளியாதவராகிய, ஈனவர் - எளியவராய், இரங்கி வீழ்ந்தார் - எம்மை எதிர்ந்து பின் நம்பேதைமை எற்றென்று தாமே இரங்கி மாண்டொழிந்தார், ஏனையர் - தம்மையும் எம்மையும், வலியுடைமையில் வைத்து அறிந்த மற்றையோர், தொழுது வாழ்ந்தார் - எம்மை வணங்கி எம்மால் சிறந்த வாழ்க்கையை எய்தினர், வானவர் - தேவர்களோ எனின், என்னை அஞ்சி - எமக்குப் பயந்து, வானிடை மறைந்து செல்வார் - விசும்பிலே மறைந்து திரியா நின்றனர், ஊனவர் தம்முள் - ஊனுடல் கொண்டுவாழும் எளிய மானிடருள்ளும், நீயே - எம்மை அறியாத பேதையாகிய நீயே, எனக்கு உயிர் இழக்கல் உற்றாய் - எம்பால் உன் உயிரினை இழந்து விடுமாறு வந்தெய்தினை, (எ - று.) தானவர் - விச்சாதரர் எனினுமாம், தானவர் தம்நிலை தேறாது எம்பால் வந்து இரங்கி வீழ்ந்தார், எம்மை அறிந்தோர் தொழுது நல் வாழ்வெய்தினர், வானவர் எமக்கஞ்சி மறைந்தே திரிவர், பேதாய்! நீயே எம்மை அறியாது வந்து வாளா உயிரிழக்கலானாய்; என்றான் என்க. | (315) | | |
|
|