அச்சுவகண்டன் திவிட்டனை அசதியாடல்

1446. மண்ணுள்வாழ் சிதலை 1சேர்தி மற்றவை வாழு நாள்கள்
எண்ணியாங் கிகந்த பின்னை யிறகுபெய்2தெழும தேபோல்
கண்ணினா 3லின்று நீயுங் கருடப்புள் ளதனை யேறி
விண்ணினா றெதிர்ந்து வந்தாய் வேற்கிரை யாகி யென்றான்.
     (இ - ள்.) மண்ணுள்வாழ் சிதலை சேர்தி - திவிட்ட நீ ஓராற்றால் புற்றினூடே
வாழ்கின்ற சிதலையினத்தைச் சேர்ந்தவனாகின்றாய், மற்றவை - (எற்றாலெனின்)
அச்சிதலைகள், வாழும் நாள்கள் - தாம் வாழ்கின்ற நாள் எல்லாம், எண்ணி ஆங்கு
இகந்து - கருதி அப்புற்றினுள்ளே கழித்து, பின்னை - வாழும் நாள் முடிந்து இறக்கும் நாள்
எய்திய பின்னர், இறகு பெய்து எழும் - புதுவதாகச் சிறகுகள் இயற்கையாற் கொடுக்கப்பெற்று வானத்திலே பறந்து எழாநிற்கும், அதேபோல் - அச்சிதலையின் தன்மையைப் போன்று, கண்ணின் -ஆராயுமிடத்து, நீயும் - இதுகாறும் உனது புற்றாகிய நகரத்தூடே வாழ்ந்த நீ தானும், கருடப்புள் அதனை யேறி - புதிதுவந்த கருடப்பறவையில் ஏறி அதன் சிறகை
நின்னுடையவாய்ப் பெற்று, விண்ணின் ஆறு எதிர்ந்து - வான் வழியே என்னை எதிர்த்து,
வேற்கு இரையாகி - என் வேலுக்கு ஊணாய், வந்தாய் - இறக்கும் பொருட்டு வந்துள்ளனை
யல்லையோ, ஆல் : அசை, (எ - று.)

     சிதலைசேர்தி - சிதலையை ஒக்கின்றாய். திவிட்டனே ! புதுவதாக வந்த கருடனை
ஏறிப் பறந்து, எம்முன்னே வந்து, உயிர்விடப் போகின்ற நீ, தம் வாழ்நாள் எல்லாம்
புற்றினுள்ளே கழித்து, ஒருநாட் புதிதாகச் சிறகு பெற்றுப் பறந்து அன்றே மாயும் ஈயலையே
ஒப்பாய் என்றான், என்க.

 (316)