அச்சுவகண்டன் தீக்கணை விடுதல் | 1453. | ஆயிடை யனன்று மீட்டு மழலுமி ழாழி வேந்தன் தீயொடு புணர்த்த போழ்தத் 1தெய்வவம் பெய்த லோடும் வேயுடை விலங்கல் சுட்டு விசும்பிடை வெம்ப வெம்பிச் சேயிடை யெரிந்து சிந்திச் செல்வன்மேற் சென்ற தன்றே. | (இ - ள்.) ஆயிடை - அப்பொழுது, அனன்று - சினந்து, அழல் உமிழ் ஆழி வேந்தன் - தீக்காலும் சக்கரப் படையுடைய அச்சுவகண்டன், தீயொடு புணர்த்த போழ்து அத்தெய்வ அம்பு எய்தலோடும் - நெருப்புத் தெய்வத்தோடே மந்திரத்தாலே சேர்க்கப்பட்டபொழுதே தெய்வத்தன்மை பெற்றதொரு தீக்கணையை எய்தவுடனே, வேயுடை விலங்கல் சுட்டு - அத்தீக்கணை மூங்கில்களையுடைய மலைகளை எரித்து, விசும்பிடை வெம்ப வெம்பி - விண் முழுதும் வெதும்பும்படி வெப்பஞ்செய்து, சேய் இடை எரிந்து சிந்தி - தொலைவிடத்தேயே எரிந்து தீச்சுடரைச் சிதறி, செல்வன்மேற் சென்றது - திவிட்டன் மேலே செல்லலாயிற்று, (எ - று.) அரவக்கணை ஒழிந்தமை கண்ட அச்சுவகண்டன் மீண்டும் நெருப்புக்கணை தொட்டான். அது மலை முதலியவற்றைச் சுட்டு விசும்பினை வெதுப்பித் தீச் சிதறி நம்பிமேற் சென்ற தென்க. தீயிடை புணர்த்த போழ்து அத்தெய்வ அம்பு எனக் கண்ணழித்து, தீத் தெய்வத்தின் மந்திரத்தை ஏற்றியபொழுதே அத்தெய்வத்தின் ஆற்றலை எய்திய அம்பு எனப் பொருள்கொள்க. | (323) | | |
|
|