திவிட்டன் துயில்விடை யம்பு தொட்டு அதனை மாற்றுதல் | 1456 | அயிலுடை யனல்செய் வேலோ னதனையு மறிந்து மற்றுத் துயில்விடை செய்யு மம்பு தொடுத்தனன் றொடுத்த லோடும் வெயிலிடை விரிந்து விண்பால் விளங்கி வீ1ழிருளை நீக்கப் பயிலுடை யுலகந் தேறிப் பட்டது முணர்ந்த தன்றே. | (இ - ள்.) அயில் உடை அனல் செய்வேலோன் - கூரியதாய்த் தீக்காலும் சினவேலையுடைய திவிட்டன், அதனையும் அறிந்து - அத்துயிலம்பு வருகையையும் அறிந்துகொண்டு, துயில் விடை செய்யும் அம்பு தொடுத்தனன் - துயில் அகற்றும் இயல்பிற்றாய துயில்விடை அம்பொன்றை அதற்கெதிரே தொடுத்துவிட்டான், தொடுத்தலோடும் - அத்துயில் விடையம்பைத் தொடுத்தவுடனே, வெயில் இடைவிரிந்து விண்பால் விளங்கி வீழ் இருளைநீக்க - வெயில் ஒளி இடையே விரியப் பெற்று விண்பகுதியெல்லாம் விளக்க முறும்படி உண்டாகிய பேரிருளை அகற்றியதாக, பயில் உடை உலகம் தேறி - உறக்கத்தே பயின்ற உலகம் முழுதும் அவ்வுறக்கம் தெளியப்பெற்று, பட்டதும் உணர்ந்தது - இடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கொண்டது, அன்று, எ : அசைகள், (எ - று.) துயில் விடை அம்பு - உறக்கம் விடுவித் தெழுப்பும் அம்பு. உலகம் உறங்குமாறு செய்யும் துயிலம்பின் வருகையை உணர்ந்த நம்பி, அதற்கு மாறாகத் துயில்விடை அம்பு தொடுத்தான், அஃது உறக்கத்தே வீழ்ந்த உயிர்களின் துயிலெடுப்பி, உலகை மூடிய இருளையும் அகற்ற எல்லாரும் உணர்வு பெற்றனர் என்க. | (326) | | |
|
|