அரசன் மனைவி வாயுவேகை

146. மாய மாயநின் றான்வரை மார்பிடை
மேய பூமகள் போல விளங்கினாள்
தூய வாமுறு வற்றுவர் வாயவள்
வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள்.
 

     (இ - ள்.) மாயம் மாய நின்றான் - தனது ஆட்சியின்கண் பொய்யாயின வெல்லாம்
கெட (மெய்யாயின எல்லாம் தழைக்க)ச் செங்கோன் முறைமையின்கண் நிலைத்து
நின்றவனாகிய அச்சுவலனசடி மன்னனுடைய, வரை மார்பிடை - உத்தம விலக்கணமமைந்த
மார்பின்கண்; மேய - இயல்பாகவே பொருந்தியுள்ள; பூமகள் போல - திருமகளைப்
போன்றே; தூய ஆம் முறுவல் - தூயனவாகிய பற்களையும்; துவர் வாயவள் - சிவந்த
வாயினையும் உடையவளும்; வளர்கொம்பு அனாள் - வளரா நின்ற பூங்கொம்பு
போன்றவளும் ஆகிய; வாயுவேகை என்பாள் - வாயுவேகை என்னும் பெயரையுடைய
நங்கை; விளங்கினாள் - பொருந்தித் திகழாநின்றாள், (எ - று.)

     மாயம் - பொய். மாய்தல் - இல்லையாதல். பொய்கெட எனவே மெய் தழைக்க
என்றாராயிற்று. ஈண்டுப் பொய்ம்மை மெய்மைகள், தீமை நன்மைகளின் மேனின்றன.
சுவலனசடி மன்னன் வாயுவேகை என்பவளை வாழக்கைத் துணையாகப் பெற்றிருந்தனன்;
அவள் அழகு மிக்கவள் என்பது கருத்து.
 

( 28 )