அச்சுவகண்டன் யானையினின்றும் வீழ்தல்

1462.

கழலவன் கனன்று விட்ட கதிர்நகை நேமி போழ
மழகளி யானை தன்மேன் மறிந்துவீழ் கின்ற மன்னன்
நிழலவிர் விலங்க னெற்றி நிமிர்ந்ததோர் காள மேகம்
அழலவன் றிகிரி பாய வற்றுவீழ் கின்ற தொத்தான்.
     (இ - ள்.) கழலவன் - வீரக்கழலணிந்த திவிட்டமன்னன், கனன்றுவிட்ட - சினந்து
ஏவிய, கதிர் நகை நேமி போழ - ஒளிச்சுடராற் றிகழ்கின்ற ஆழி மார்பைப் பிளத்தலாலே,
மழகளியானை தன்மேல் - இளமையும் களிப்பு மிக்க தன் அரசயானை எருத்தத்தினின்றும்,
மறிந்து வீழ்கின்ற மன்னன் - குப்புற்று வீழாநின்ற அச்சுவகண்டன், நிழல் அவிர்விலங்கல்
நெற்றி - ஒளிவீசுகின்ற மலையுச்சியின்கண், நிமிர்ந்தது ஓர் காளமேகம் -
வளர்ந்துள்ளதொரு கரிய முகில், அழலவன் திகிரி பாய - கதிரவனுடைய ஒளி வட்டம்
பாய்தலாலே, அற்று வீழ்கின்றது ஒத்தான் - துணிபட்டு வீழ்ந்ததனை ஒத்தான்,(எ - று.)

     நம்பி ஏவிய ஆழியால் மடிந்து வீழ்கின்ற அச்சுவகண்டன் ஞாயிற்றின் ஒளி
பாய்தலாலே மலையினின்றும் சரிந்து வீழ்கின்ற முகிற் படலத்தை ஒத்தான் என்க.

(332)