(இ - ள்.) நெறிதலை திரிவிலான்மேல் - தருக்க நெறியிடத்தே மாறுபடுதலில்லாத ஒரு வாதியின் எதிரே, நினைவு இலான் - அத்தருக்க நூல் நெறியை நன்கு உணர்தலில்லாத பிரதிவாதி ஒருவன், மொழியப்பட்ட - எடுத்துக் கூறப்பட்ட, மறுதலை - மறுமொழி, முடிக்கும் ஏதுவாய் - அவ்வாதியின் மேற்கோளை வலியுறுத்தும் ஏதுவாகி, வழி அழிப்பதேபோல் - தன்னுடைய வாதநெறியை அழித்துவிடுவதைப்போன்று, பொறிதலை மணந்த காளைமேல் - திருமகளை மணந்துள்ள திவிட்டன்மிசை, வரப்புணர்த்த நேமி - செல்லவிட்ட அச்சுவகண்டன் ஆழிப்படை, செறிதலை இலாத மன்னன் தன்னையே - அடக்கமில்லாத அவ்வச்சுவகண்டனையே, செகுத்தது - கொன்று தீர்த்தது, அன்று, ஏ : அசைகள், (எ - று.) தருக்க வாதத்தின்கண் பேசத் தெரியாமையாகிய தோல்வித் தானம், மயங்கப் பேசுதலும், வாளாவிருத்தலும் என, இருவகைப்பட்டு, விரியான் இருபத்திரண்டாம். அவற்றுள், ஈண்டுக் கூறியது தான் எடுத்துக்கொண்ட மேற்கோளைச் சாதிக்கமாட்டாமல் அதற்குக் கேடு வரப் பேசுதல், என்பதன் பாற்படும். அஃதாவது :- தான் கூறும் ஏதுவே தனது மேற்கோளை அழித்து, வாதியின் மேற்கோளைச் சாதிப்பதாய் முடிதல். அங்ஙனம் கூறும் ஏதுவினை ஏதுப்போலி என்ப. இவ்வேதுப்போலியும், மூவகைப்பட்டு விரியான் இருபத்தொன்றாம். இவற்றினியல்பெல்லாம் தருக்க நூலுட் கண்டுணர்க. ஈண்டு ஆழிப்படைக்கு உவமை ஏதுப்போலி.
|