(இ - ள்.) மாகம் மழைவண்ணன் - விசும்பின் கண்ணதாகிய முகில்போலும் நிறமுடைய அச்சுவகண்டன், மாற்றான் மேல் விட்டெறிந்த - தன் பகைவனாகிய திவிட்டன் மேலே விசைத்து வீசிய, வேகவிறல் ஆழி - விரைந்த செலவினையுடைய வெற்றிச்சக்கரம், மீட்டே பெயர்ந்து - மீண்டும் திரும்பி, தன் போக வரை மார்பம் - தனது போகத்திற்குக் காரணமான மலைபோன்ற மார்பினை, போழ்படுப்ப - பிளந்திட, பொன்றினான் - மாள்வதானான், ஆகுவது ஆம் - ஊழால் நிகழ்தற்குரிய எச் செயலும் நிகழ்ந்தே தீர்வதாம், அதனை - அங்ஙனம் நிகழ்கின்ற செயல்களை, யாரே அறிவர் - முன்னரே அறிந்துகொள்ளவல்லார் யாரே உளர், (எ - று.)“சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்“ இஃது ஊழின் இயற்கை; ஊழினது செயலை மானிடர் அறிந்துகொள்ளும் வன்மை யுடையோரல்லர் என்று இரங்கிய படியாம். |