(இ - ள்.) செம்பொன்பட்டம் செறிந்த - சிவந்த பொன்னினாலாகிய பட்டம் பொருந்திய; திருநுதல் - அழகிய நெற்றியையும்; அம் பொன்பட்டு உடையாள் - அழகிய பொன் பட்டாடையை உடையவளுமான அந்த வாயுவேகை என்பவள்; பைம்பொன் பட்டம் அணிந்த கொல் யானையான் - பசிய பொன்னினால் ஆகிய பட்டத்தை நெற்றியிலணிந்ததும் கொலைத் தொழிலையுடையதுமான யானையையுடைய சுவலனசடியரசனின்; அம்பொன் பட்டம் நறுங்குழலார்க்கு எலாம் - அழகிய நெற்றிப் பட்டத்தையணிந்தவர்களும் மணந்தங்கிய கூந்தலையுடையவர்களுமான மனைவியர்கள் எல்லோருக்கும்; அணி ஆயினாள் - அணிகலன்போலச் சிறந்து திகழ்ந்தாள், (எ - று.) “பட்டம்“ என்ற சொல் ஒரு பொருளில் மும்முறை வந்தது, சொற்பொருட்பின் வருநிலை. அவ்வரசனுடைய பட்டத்துத் தேவியர் அனைவருள்ளும் வாயுவேகை சிறந்து நின்றனள் என்க. |