1475. குழவி நாயிற் றெழிலேய்க்குங்
     குழம்பார் கோலக் குங்குமமே
மெழுகி மீதோர் மணியாரம்
     வீசிக் கிடந்த விரையாகம்
ஒழுகு குதுதிச் சேறாடி
     யோடை யானை நுதன்மீது
வழுவி வீழ்ந்த வகைநாடின்
     மாயம் போலு மறவேந்தே.
     (இ - ள்.) குழவி நாயிற்று எழில் ஏய்க்கும் - இளஞாயிற்றின் அழகை ஒத்த, குங்குமம்
குழம்பு ஆர்கோலம் மெழுகி - குங்குமச் சேற்றாலே பொருந்த ஒப்பனையமைய மெழுகி,
மீது ஓர் மணியாரம் வீசி - மேலே ஒரு மணிவடம் புரண்டு கிடக்கப்பெற்ற, விரை ஆகம்
- நறுமணமுடைய நின் திருமார்பு, ஒழுகு குருதிச்சேறு ஆடி - புண்களினின்றும் ஒழுகிய
குருதிக் குழம்பிலே முழுகப்பெற்று, ஓடையானை நுதல்மீது - முகபடாமுடைய யானையின்
நெற்றிமீது, வழுவி - நழுவி, வீழ்ந்த வகை நாடின் - விழுந்துள்ள தன்மையை
ஆராயுமிடத்தே, மறவேந்தே - வீர மன்னனே, மாயம் போலும் - எமக்கு ஒரு மாயவித்தை
போலத் தோன்றா நின்றது.
(எ - று.)

     நாயிறு - ஞாயிறு ; போலி. மாயம் - இந்திரசால முதலியன.

     குங்குமக் குழம்பு நீவி மணியாரம் வீசி இளஞாயிறுபோற் றிகழ்ந்த உன் மேனி,
அந்தோ குருதிச் சேறு படிந்து யானை நெற்றியின்மீது வழுவி வீழ்ந்துள்ள நிகழ்ச்சியைக்
கருதுங்கால் எமக்கு மாயம்போலத் தோன்றாநின்ற தென்றார் என்க.

(345)