அச்சுவகண்டன் மனைவியரின் தாபதநிலை

1485. ஆவி யாய வயக்கிரீவற்
     கமிர்தம் பூத்த வஞ்சாயற்
றேவி மார்கள் கலனழித்துச்
     சேணி யுலகஞ் 1சென்றெய்தி
வீவில் காமன் வருவீதி
     கற்பு வேலி யால்விலக்கித்
தாவி னிறையின் 2றாழதனாற்
     பொறியின் வாயி றாழ்ப்பெய்தார்.
     (இ - ள்.) அயக்கிரீவற்கு - அச்சுவகண்டனுக்கு, ஆவியாய - உயிரை ஒத்தவரும்,
அமிர்தம் பூத்த - அமிழ்தத்தால் இயன்றதனை ஒத்த, அம்சாயல் - அழகிய
தோற்றத்தையுடையோரும், தேவிமார்கள் - அவன் மனைவியரும் ஆகிய மகளிர்கள், கலன்
அழித்து - மங்கல அணி முதலிய அணிகலன்களைக் களைந்து நீத்து, சேணி உலகம்
சென்று எய்தி - தம் மலையுலகத்தை அடைந்து, வீவுஇல் காமன் - அழிவில்லாதவனாகிய
மதவேள், வருவீதி - தம்பால் எய்தும் வாயிலை, கற்பு வேலியால் விலக்கி - கற்பாகிய
திண்ணிய வேலியாலே தடைசெய்து, தாஇல் - குற்றமற்ற, நிறையின் - செறிவு என்னும்,
தாழதனால் - தாழக்கோலாலே, பொறியின் வாயில் - ஐம்பொறிகளாகிற வாயில்களை,
தாழ்ப்பெய்தார் - தாழிட்டனர்,
(எ - று.)

     சேணி - ச்ரேணி என்பதன் திரிபு.

     அமிர்தம் பூத்த அஞ்சாயல் தேவிமார்கள் கலன் கழித்து உத்தர சேடிக்கட் சென்று
காமன் வரும் வழியைக் கற்பு வேலியால் அடைத்துப் பொறிவாயிலை நிறையாகிய தாழ்ப் பெய்தனர் என்க. இது தாபதநிலை எனப்படும்.

(355)