(இ - ள்.) முருக்கு வாயவள் முள் எயிற்று ஏர்நகை உருக்க - பலாச மரத்தின் மலர் போன்ற சிவந்த வாயையுடைய வாயு வேகையினது கூரிய பற்களினின்று உண்டாகின்ற அழகிய புன்னகையானது தன்னுள்ளத்தையுருகச்செய்ய; வேந்தன் ஒருங்கு உறைகின்றநாள் - சுவலனசடி மன்னன் அம் மனைவியுடன் கூடிவாழ்கின்ற காலத்தில்; அலர்தாரினான் - மலர்ந்த மலரினால் தொடுக்கப்பெற்ற மாலையை அணிந்தவனாகிய; பெய்கழல் - மறக் கழலையணிந்த; அருக்க கீர்த்தி என்பான்- அருக்க கீர்த்தியென்னும் பெயரினையுடையவன், பெருக்கம் ஆகப் பிறந்தனன் - சிறப்புண்டாகுமாறு தோன்றினான், (எ - று.) வாயுவேகையோடு சுவலனசடி யரசன் இன்பந்துய்த்து வாழுங் காலத்தில் அருக்க கீர்த்தி என்னும் மகன் தோன்றினன் என்க. முருக்கு - பலாசமரம்; அதன் மலர்க்கு முதலாகுபெயர். “மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு“ என்பது பற்றிப் பெருக்கமாகப் பிறந்தனன் என்றார். |