(இ - ள்.) கங்கையும் சிந்துவும் - கங்கைப் பேரியாற்றினும் சிந்துப் பேரியாற்றினும், கருதும் மாநதி - இன்னோரன்ன தெய்வத்தன்மையுடையவாய்க் கருதப்படும் பிற பேரியாறுகளினும், தங்குநீர் எனையவும் - பொருந்திய நீர் எத்துணையும், தந்து - கொணர்ந்துதரப்பட்டு, பொங்கிய தாமரை முகத்த - மலர்ந்த தாமரை வடிவிற்றாய்ச் செய்யப்பட்ட முகத்தையுடைய, பொற்குடங்களால் - பொன்னாலியன்ற குடங்களாலே, பல மங்கல மரபினால் - பலவாகிய மண்ணுமங்கல முறைகளாலே, மன்னர் - வேந்தர்கள், ஆட்டினார் - விசயதிவிட்டர்களை மங்கல நீராட்டினர், (எ - று.) கங்கை முதலிய கடவுள் யாற்று நீரைப் பொற்குடங்களிலே கொணர்ந்து அரசர்கள் முறைப்படி விசயதிவிட்டர்களுக்கு மண்ணுமங்கல விழாச் செய்தனர் என்க. |