(இ - ள்.) விட்டு - சுடர்வீசி, எரி - ஒளிர்கின்ற, மணிவரை - இரத்தின பல்லவம் என்னும் மலையை உடைய, நேமி வேந்தனை - சக்கரத்தையுடைய பிரதி வாசுதேவனாகிய அச்சுவகண்டனை, அட்டு - கொன்று, இவன் - இத்திவிட்டன், ஆழி எய்தினான் ஆதலான் - தனக்குரிய சக்கரப் படையை அவன்பாலிருந்து பெற்றானாதலாலே, மட்டு இவர் அலங்கலான் - தேன் துளும்புகின்ற மலர்மாலையையுடைய இவன், வாசுதேவனே - வாசுதேவனே ஆவான், என்று - என்று கூறி, ஒட்டிய ஒளி முடி - பொருந்திய ஒளியை உடைய முடிக்கலன், ஒன்று - ஒன்றனை, சூட்டினார் - திவிட்டநம்பியின் - தலையிலே சூட்டினார்கள், (எ - று.)பிரதி வாசுதேவனாகிய அச்சுவகண்டனைக் கொன்று அவன் ஆழியையும் கைப்பற்றினமையால் நம்பி வாசுதேவனே என்று புகழ்ந்து முடிக்கலன் அணிந்தனர் என்க. |