மருத நிலம்

15. அணங்க 1னாரண வாடல் முழவமும்
கணங்கொள் 1வாரணக் கம்பலைச் செல்வமும்
மணங்கொள் வார்முர சும்வய லோதையும்
இணங்கி யெங்கு மிருக்குமொர் 2பாலெலாம்.
 
     (இ - ள்.) அணங்கு அனார்-தெய்வப் பெண்களையொத்தவர்களான அழகிற்
சிறந்தமகளிர்; அணவு ஆடல்முழவமும்-பொருத்தமாக நடிக்கும் பொழுது அடிக்கப்படுகிற
முழவோசையும்; கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்-கூட்டமான கோழிச்
சேவலைக்கொண்டு போர்செய்விப்பார் செய்யும் பேராரவாரமும்; மணம்கொள்வார்
முரசும்-மணம் குறித்து முழக்கப் படும் வார்க்கட்டமைந்த முரசு முழக்கமும்; வயல்
ஓதையும்-வயலிடத்தே உழவர்கள் செய்யும் ஆரவாரமும்; எங்கும் இணங்கி-எவ்விடத்திலும்
பொருந்தி; ஒர்பால்எலாம் இருக்கும்-நாட்டின் ஒரு பகுதியாகிய மருதநிலத் திடத்தே
இருக்கும். (எ - று.)

     வாரணம்-கோழியின் பொதுப்பெயர். கம்பலை என்ற குறிப்பால் சேவலையுணர்த்திற்று.
வாரணக்கம்பலை என்பதற்கு யானையைப் பழக்குவார் செய்யும் ஒலிஎன்றும் பொருள்
கொள்ளலாம். கணங்கொள் வாரணக்கம்பலை என்பதற்குத் திரட்சியமைந்த சங்கொலி
என்றும் பொருள் கூறலாம். சங்கொலி மங்கலமுடையது; நன்மைதீமை எல்லாவற்றினும்
முழங்குவது. “விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும்............அவையெல்லாம் ஊரல்ல
அடவிகாடே“
என்றார் தேவாரத்தில், ஆசிரியர் இரட்டுற மொழிதலாகப் பாடிய 'வாரணக் கம்பலை'
பலபொருள் தந்து விளங்குகின்றது. செல்வம் என்னும் சொல் ஈண்டு மிகுதியை
விளக்கிநின்றது. அணங்கனார் அணவு ஆடல்-தெய்வப் பெண்களைப் போல்வார்
கைகோத்தாடும் குரவைக் கூத்துமாம். அனார், அன்னார் என்பதன் தொகுத்தல் விகாரம்.
முழா-“குறியதன் கீழாக்குறுகலும் அதனோடுகரமேற்றலும் இயல்புமாந் தூக்கின்“ என்பதனால்
முழவம் என்றாயிற்று: அம் சாரியை.

     வாரணம்; யானை, சங்கு, கோழி, பன்றி, கடல், மறைப்பு முதலிய பலபொருள்களைத்
தரும் ஒரு சொல்.

( 15 )