(இ - ள்.) அம்நகை - அழகிய பற்களையும்; தாம மல்லிகைமாலை - ஒளியுள்ள மல்லிகை மாலையையும் உடைய; சயம்பவை - சுயம்பிரபை என்பவள்; ஏமம் நம்உலகின் இழிந்து - இன்பமே நுகருமிடமான விண்ணுலகினின்றும் இறங்கி; நாமநல் ஒளி வேல்நம்பி நங்கையாய் - அச்சத்தை யுண்டாக்குவதும் நல்ல ஒளியுள்ளதுமான வேற்படையையுடைய சிறந்தோனாகிய அருக்ககீர்த்தியின் தங்கையாய்; காமவல்லியும் காமுறத் தோன்றினாள் - கற்பகத்திற் படரும் காம வல்லிக்கொடியும் தன் அழகைக் கண்டு விரும்புமாறு பிறந்தாள், (எ - று.) அருக்க கீர்த்திக்குத் தங்கையாகச் சுயம்பிரபை என்பவள் தோன்றினாள் என்க. நம்பி என்பது ஆண்பாற் சிறப்புப்பெயர்; நங்கை என்பது பெண்பாற் சிறப்புப்பெயர்; நம்பி நங்கையாய் - என்பதற்குச் சிறந்த ஆண்மகனான சுவலனசடியின் சிறந்த மகளாக என்று பொருள் உரைப்பினுமாம். முற்பிறப்பிலே தேவலோகத்தில் வாழ்ந்த உயிர் பிற்பிறப்பில் இம்மகளாகப் பிறந்ததென்பார், “ஏமநல்லுலகின் னிழிந்து தோன்றினாள்“ என்றார். உலகின்னிழிந்து: னகரமெய் விரித்தல் விகாரம். ஸ்வயம்பிரபா - என்னும் வடசொல் இயற்கை யொளியுடையாள் என்று பொருள்தரும். |