திவிட்டனின் அரசியல் மாண்பு

1502. சக்கரந் தண்டுவாள் சங்கு விற்குடை
மிக்கெரி மணியிவை யெய்தி வீரியன்
மக்களு ளரசர்கள் வணங்குந் தெய்வமாய்த்
தொக்கெரி சுடரொளி துளும்பத் தோன்றினான்.
     (இ - ள்.) சக்கரம் தண்டு வாள் சங்கு வில் குடை ஆழியும் தடியும் வாளும் சங்கும்
வில்லும் குடையும், மிக்குஎரி மணி - மிகுந்து விளங்குகின்ற திருமணியும், இவை - ஆகிய
இவையிற்றை எய்தப்பெற்று, வீரியன் - வீரமிக்க திவிட்ட நம்பி, மக்களுள் - மானிடர்
உள்ளும், அரசர்கள் - மன்னர் ஆயவர், வணங்கும் தெய்வமாய் - வழிபடுகின்ற தெய்வமே
ஆகி, எரிதொக்கு சுடர்ஒளி துளும்ப - ஒளிகள் திரண்டு சுடர்ந்து ஒளிர்ந்து தவழ,
தோன்றினான் - விளங்கித் தோன்றாநின்றான், (எ - று.)

     சக்கரம் முதலிய அருங்கலங்கள் கைவரப்பெற்ற நம்பி, மக்களுள்ளும் மன்னரால்
வணங்கப்படும் தெய்வமாய்ப் புகழுடனே திகழா நின்றான் என்க.

     “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
     இறை என்று வைக்கப் படும்“
என்றார் வள்ளுவரும் என்க.

(372)