திவிட்டன் அவையில் புலவர்கள் வரலாறு கூறுதல் | 1506. | முரசுவீற் றிருந்ததிர் மூரித் தானைய னரசுவீற் றிருந்தனன் பின்னை யாயிடைக் கரைசெய்நீர்க் கருங்கடல் வேலி காவலற் குரைசெய்நூற் சரிதைகள் புலவ ரோதினார். | (இ - ள்.) முரசு - வெற்றி முரசம், வீற்றிருந்து - ஒழியாதே இருந்து, அதிர் - முழங்குகின்ற, மூரி - பெரிய, தானையான் - படையை உடைய திவிட்டநம்பி, அரசு வீற்றிருந்தனன் - அரியணை அமர்ந்து கோலோச்சுவானாயினன், பின்னை - அப்பால், ஆயிடை - அவ்வோலக்க மண்டபத்தே, கரைசெய் நீர்க்கருங் கடல்வேலி - அலைகளாலே முழங்குதலைச் செய்கின்ற கடலை வேலியாகவுடைய உலகத்தை, காவலற்கு - காவல் செய்கின்ற திவிட்ட வேந்தனுக்கு. புலவர் - நல்லிசைப் புலவர்கள் உரை செய் நூற் சரிதைகள் - புகழ்தற்குரிய மெய்நூல்களிலே கூறப்படும் வரலாறு களை, ஓதினர் - கூறுவாராயினர், (எ - று.) வெற்றிமுரசம் முழங்க அரசு வீற்றிருந்த நம்பிக்கு, புலவர்கள் நூற் சரிதைகள் ஓதினர் என்க. | (375) | | |
|
|