(இ - ள்.) வன் திறல் மலி - வலிய ஆற்றல் மிக்க, பலதேவர் தம்மொடு - பல தேவரோடு, சென்றவர் - சென்ற வாசுதேவர், செற்றலர்ச்செகுத்து - தம் பகைவராகிய பிரதிவாசுதேவர் முதலியோரை வென்று, பின்னரே - அதன்பின்னர், குன்றம் ஒன்று எடுத்தலும் - ஒருமலையைத் தூக்கிய வரலாற்றினையும், கொண்டு - புராணத்தினின்றும் மேற்கொண்டு, கூறினார் - திவிட்டனுக்குக் கூறினார்கள், பொன்றலில் - அழிதலில்லாத, புராண நூற் புலவர் - புராணம் கூறுதலில் வல்ல நல்லிசைப் புலவர்கள், என்பவே - என்று அறிஞர் கூறுவர், (எ - று.) வலிய திறலுடைய பலதேவருடன் சென்று பிரதிவாசுதேவரைக் கொன்றருளிய பின்னர்க் குன்றமெடுத்த வரலாறுண்மையையும் புலவர் புராணத்தினின்றும் எடுத்துக் கூறினர், என்க. |