சுயம்பிரபையின் அழகுச் சிறப்பு

151.

கங்கை நீரன ஞான்ற கதிரிளந்
திங்க ளாற்றொழப் பட்டது செக்கர்வான்
மங்கை மார்பிறப் பும்மட மாதரிந்
நங்கை யாற்றொழப் பாடு நவின்றதே.
 

     (இ - ள்.) செக்கர்வான் - செவ்வானமானது; கங்கை நீரன - கங்கையாற்றின்
நீரைப்போல்; ஞான்ற - ஒழுகிய; கதிர் - ஒளிகளையுடைய; இளந் திங்களால் - பிறைத்
திங்களினால்; தொழப்பட்டது - வணங்கப் பெற்றது; அதைப்போல; மங்கைமார் பிறப்பும் -
பெண்களின் பிறப்பும்; மடமாதர் இந் நங்கையால் - மடமையையும் அழகையுமுடைய
இச்சிறந்த பெண்ணால்; தொழப்பாடு நவின்றது - வணங்கப்படுதற் றன்மையைப் பெற்றது,
(எ - று.)

     தன்கண் பிறைதோன்றலால் செக்கர்வானம் தொழப்படுகின்றது. தன்கண் சுயம்பிரபை தோன்றலால் பெண்குலம்தொழுந் தகுதியுடைத்தாயிற்று என்பது கருத்து. ஞான்ற - நான்ற; முதற்போலி. நால்; பகுதி. மாலைப்பொழுதில் பிறையைத் தொழுதல் மரபு. மடமாதர் - மடமையையுடைய மாதர். மடமையாவது எல்லாம் அறிந்தும் ஒன்றையும் அறியாது போன்றிருக்குந் தன்மை.
 

( 33 )