திவிட்டன் குன்றெடுக்கச் செல்லல் | 1511. | அறிபவ ரவையவை மொழியக் கேட்டலும் நெறிபடு 1நீதிமே னிறைந்த சிந்தைய னெறிகடற் படையினோ டெழுந்து சென்றரோ குறுகினன் கோடிமா சி2லைவன் குன்றமே. | (இ - ள்.) அறிபவர் - புலமையாளர், அவை - அவ்வரசவையின்கண், அவை - அப்புராணப் பொருள்களை, மொழியக் கேட்டலும் - எடுத்து விளம்பக் கேட்டவுடனே, நெறிபடு நீதி மேல் நிறைந்த - வரலாற்று முறையிலே வரும் அவ்வாசுதேவர் செயலாகிய நீதிமேல் தானும் செல்லுதலையே எண்ணிய, சிந்தையன் - நெஞ்சத்தையுடையனாய், எறிகடற் படையினோடு அலை வீசுகின்ற கடல்போன்ற பெரும்படையோடே, எழுந்து சென்று - அரண்மனையினின்றும் புறப்பட்டுப்போய், மா சிலை வன்கோடிக்குன்றம் குறுகினன் - பெரிய எதிரொலியையும் வன்மையையுமுடைய கோடிக்குன்றம் என்னுமொரு மலையினை எய்தினான், (எ - று.) சிலை - ஒலி - கல்லுமாம். பண்டு புராணத்தே கூறப்பட்ட வாசுதேவர் குன்றமெடுத்துப் புகழ் கொண்டவாறு யானும் குன்ற மெடுப்பல் என நம்பி படையினோடே கோடிக்குன்றத்தை எய்தினான் என்க. | (381) | | |
|
|