1514. பிலங்களு ளுறைவன பெரிய நாகத்தின்
புலங்கெழு திரட்சிய புச்சந் தாழ்வன
அலங்கலா னெடுத்திட வகழ்ந்தெ ழுந்தவவ்
விலங்கலின் விழுகதிர் வேர்க ளொத்தவே.
     (இ - ள்.) பிலங்களுள் உறைவன - அக்கோடிக்குன்றத்தின் குகைகளிலே
வாழ்வனவாகிய, பெரிய நாகத்தின் - பெரிய பாம்புகளின், புலங்கெழு திரட்சிய புச்சம் -
நிலத்திலே பொருந்திய பரியவால் (உடல்), தாழ்வன - தூங்குவன, அலங்கலான் - வெற்றி
மாலையணிந்த திவிட்டன், அகழ்ந்து எடுத்திட - கீண்டு எடுத்தலாலே, எழுந்த
அவ்விலங்கலின் - மேலெழாநின்ற அக் குன்றத்தினுடைய, விழுகதிர் வேர்கள் ஒத்தவே -
வீழ்த்தப்பட்ட ஒளியுடைய வேர்களைப் போன்று தோன்றின, (எ - று.)

     நாகத்தின் புச்சம் தூங்குவன வேர்கள் ஒத்த என்க.
     புச்சம் - வால் - ஈண்டுப் பாம்பின் உடல், புலம் - நிலம்.

     அலங்கலான் அகழ்ந்தெடுத்த அம் மலையின்கீழ் வாழும் பெரும் பாம்புகள்
தொங்குவன அம்மலையின் பரிய வேர்களை ஒத்திருந்தன என்க.

(384)