வேறு | 1518. | பொருமாலை வேலரசர் போற்றிசைப்பப் பூவின் அருமா மழைபெய் தமருலக மார்ப்பக் கருமா னெடுவரையோர் கைத்தலத்தி னேந்தித் திருமா மணிவண்ணன் செம்மாந்து நின்றான். | (இ - ள்.) பொரு மாலை வேல் அரசர் - போர் செய்யும் இயல்புடைய வேல்வேந்தர்கள், போற்றிசைப்ப - புகழ்ந்து வாழ்த்துக்கூற, பூவின் அருமா மழை - கற்பக மலராலாய பெறற்கரிய பெரிய மழையினை, அமரர் பெய்து - தேவர்கள் பொழிந்து, ஆர்ப்ப - ஆரவாரிப்ப, கரு மா நெடு வரை ஓர் கைத்தலத்தின் ஏந்தி - கரிய பெரிய நீளிதாய கோடிக் குன்றத்தைத் தன் ஒரு கையாலே ஏந்தியவனாய், திருமா மணிவண்ணன் - திருமகள் முயங்கும் சிறந்த நீலமணி நிறமுடையனாகிய திவிட்டன், செம்மாந்து நின்றான் - வீறுகொண்டு விளங்கினான் (எ - று.) மணிவண்ணனாகிய நம்பி, அரசர் போற்ற, அமரர் மலர் மாரி தூற்ற, கரிய அந் நெடுங்குன்றைத் தன்னொரு கைத்தலத்தே ஏந்தி, வீறுடன் நின்றான் என்க. | (388) | | |
|
|